மதுரை வரலாறும், மள்ளரின் மேன்மையும்

மதுரை வரலாறு

        தென்பாண்டி நாட்டிலுள்ள பள்ளர்கள் நடுவே மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கி வந்துள்ளது. வைகையாற்றின் தென்கரையில் அவனியாபுரம்,வில்லாபுரம்,பழங்காநத்தம்,மாடக்குளம்,பொன்மேனி,தானத்தவம்புதூர்,விராட்டிபத்து,அச்சம்பத்து,ஆரப்பாளையம்,அனுப்பானடி,சிந்தாமணி,ஐராவத நல்லூர்,விரகனூர் ஆகிய ஊர்களும், ஆற்றின் வடகரையில்வண்டியூர்,கருப்பாயூரணி,மானகிரி,மதிச்சியம்,கோசாகுளம்புதூர்,செல்லூர்,'மீனாட்சி புரம்' என்ற பெயரில் மூன்று ஊர்கள்,தத்தநேரி,விளாங்குடி ஆகிய ஊர்களும் மதுரை மாநகருக்குள் நடுவம் கொண்டுள்ள மருத நில மக்களான பள்ளர்களின் பழம்பெரும் குடியிருப்புகளாகும்.


         மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்குக் கோபுரம் அவனிவேந்தராமன் என்கிற சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களை எழுப்பியவனும் இவனே. இச்சுவர் 'சுந்தர பாண்டியன் திருமதில்' என்றே வழங்கப்படுகிறது (கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.279). பாண்டிய அரசர்கள் 'அவனிப சேகரன்' என்றும், பாண்டிய அரசிகள் 'அவனி முழுதுடையாள்' என்றும் அழைக்கப் பெற்றனர்(கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.152). இது பற்றியே அவனியாபுரம் என்ற ஊர்ப் பெயர் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் பள்ளர்குல மக்களே பெருந்திரளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 


        பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் பாண்டியர் வரலாற்றை அறிய உதவுகிறது. மதுரையைப் பற்றிய அக்காலத்தியக் கதைகளை இப்புராணம் பதிவு செய்துள்ளது. 'மாடக்குளக்கீழ் மதுரை' எனக் கல்வெட்டுகளில் வரும் பெயர் இந்நூலிலும் வருகிறது. 'மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு' எனப் பள்ளர் வரலாற்றை பறைசாற்றும் பழனி செப்பு பட்டய வரி 216 குறிக்கும். பாண்டியர் வரலாற்றை தாங்கிய மேற்கண்ட வரலாற்று முதன்மைச் சான்றுகள் முன்மொழிகின்ற மதுரை 'மாடக்குளம்' பள்ளர்களின் பழம்பெரும் ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.


சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் - ஊர்சூழ்வரி
அடிகள் 15 - 22
                             மல்லன் மதுரை
"அல்லலுற் றாற்றா தழுவளைக் கண்டேகி
மல்லன் மதுரையா ரெல்லாருந் தாமயங்கித்
களையாத துன்பமிக் காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கோல்
மன்னவர் மன்ன மிதிக்குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றஞ் சிதைந்த திதுவென்கோல்
மண் குளிரச் செய்யு மறவே னெடுந்தகை
தண்குடை வெம்மை விளைந்த திதுவென்கோல்
"

    பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்ற கண்ணகியைக் கண்டு அவள் துயரத்தைத் தம்மால் ஆற்ற முடியவில்லையே என்று ஏக்கமுற்று மல்லன் பாண்டிய நெடுஞ்செழியனுடைய மதுரை நகரத்தில் வாழுகின்ற மக்களெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் எடுத்துரைக்கின்றது.


        இச்செய்யுளின் மூலம் 'மல்லன் மதுரை' வாள் வேந்தனான தென்னவன் பாண்டிய மன்னனின் தலைநகர் என்பது தெரிய வருகிறது. நெடுநெல்வாடையும் பாண்டியரின் தலைநகரை 'மாட மோங்கிய மல்லன் மூதூர்' (அடி.29) என்கிறது. பொ.வே. சோமசுந்தரனாரின் கழக வெளியீடு 'மல்லன் மூதூர்' என்கிறது. ஏனைய பதிப்புகள் சிலவற்றில் திரிக்கப்பட்டு 'மல்லல் மூதூர்' எனப்பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'மல்லன் மூதூர்' என்றாலும் வளமுடைய பழைமையான மருத நிலத்து ஊர் என்று தான் பொருள். வளம் என்றாலே பயிர்த்தொழில்,உற்பத்திப் பெருக்கம் என்பதையே குறிக்கும். எனவே பாண்டியரின் தலைநகரான 'மல்லன் மூதூர் - மல்லன் மூதூர்' என்பது மள்ளர்களின் ஊர் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளவியலாது. 


திருவிளையாடற் புராணம்
மெய்க்காட்டிட்ட படலம்
செய்யுள் 27
                    மல்லன் மாநகரில் மள்ளரின் ஆரவாரம்
"பல்லிய மொலிக்கு மார்பும் பாயபரிசுலிக்கு மார்ப்புஞ்
சொல்லொலி மழுங்க
மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக்
கல்லெனுஞ் கைம்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள்
மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே"


    பல்வகை இசைக்கருவிகளின் முழக்கமும், குதிரைகளின் கனைப்பொலியும் மள்ளர் போர்ப்படை வீரர்களின் ஆரவார ஒலியும் ஒன்றோடொன்று கலந்து பேரொலியாயின. அப்படி மள்ளர் சிவபெருமானின் மள்ளர் படை வரும் ஒலி, முன்பொரு காலத்தில் பாண்டிய மல்லனின் மதுரைக் கடல் சீறி வந்து கொண்டது போலிருந்தது எனக் கூறும் மேற்கண்ட செய்யுளடியின் ஊடாக மதுரை மாநகர், மள்ளர்களின் பேரூர் என விளங்கி வந்தமையை அறிய முடிகிறது. இரா.பி.சேதுப்பிள்ளை தனது 'ஊரும் பேரும்' என்னும் நூலில் மதுரை என்பதை 'மருதந்துறை' என்று குறிப்பிடுகிறார்.


        மதுரை காந்தி என்ற நூலில் பா.சி.சந்திரபிரபு, 1935 ஆம் ஆண்டு நா.ம.இராசுப்பராமன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்தபோது மதுரை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


    "நகராட்சியின் மூலம் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளும் நடைபெற்றன. நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களுக்கும், தெருக்களுக்கும் சாதிப் பெயர் சூட்டக் கூடாது என்று ஐயா அவர்கள் தடை விதித்தார். சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அரசுகள் இது போன்ற சீர்திருத்தம் கொண்டுவர இன்றும் கூடத் தயங்குவதைப் பார்க்கிறோம். புரட்சிகரமான இத்திட்டத்தை 1935ஆம் ஆண்டில் ஐயா அவர்கள் மதுரையில் செயல்படுத்தியது அசாதாரணமானதாகும். அதற்கிணங்க சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மாற்றுப் பெயர் அளிக்கப்பட்டன. உதாரணமாக 'பள்ளர் தெரு' என்று வழங்கி வந்த தெருவுக்கு 'பெருமாள் கோயில் தெரு' என்று சூட்டப்ப் பட்டது. இன்று அந்த தெருவில் வசிப்பவர்களும் கூட இச்செய்தியை அறிவார்களா என்பது சந்தேகமே." (பா.சி.சந்திரபிரபு, மதுரை காந்தி (ஒரு சத்தியாகிரகியின் கதை), ப.44-45)
    

        பெருமாள் கோயில் தெருவாகப் பெயர் மாற்றப்பட்ட 'பள்ளர் தெரு' மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மேற்குப் புறம் இருந்தது. இவ்வாறு பள்ளர் குல மக்களின் அடையாளங்கள் பல அழிந்து போய்விட்டன.


பாண்டியர் இடுகாடு - கோவலன் பொட்டல்
    

        மதுரை பழங்காநத்தத்தில் உள்ள 'கோவலன் பொட்டல்' என அழைக்கப் படுகின்ற 'பாண்டியர் இடுகாடு' உண்மை வரலாற்றை உணர்த்துவதற்குத் தடம் பிடித்து காட்டும் தரவாக விளங்குகிறது. கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாறு அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தத்தில் உள்ள பாண்டியர் இடுகாடு என்பது இன்று பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் 'தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட மயானம்' என்று எழுதி வைக்கப் பட்டுள்ளது. இடுகாடு என்பது ஒரு குலத்திற்கு சொந்தமான சொத்தாகவே இருந்து வருவதை நாம் பார்க்கின்றோம். பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஃது தமிழரின் மரபு வழக்காறாகவே இருந்து வருகிறது.

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு நுழைவுப் பகுதி புகைப்படம்)

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு உள்ப்புறம் புகைப்படம்)

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாட்டில் உள்ள பள்ளரின் கல்லறை)

        பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைச் சிறைப்படுத்தி மரண தண்டனை வழங்கிக் கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே 'பாண்டியர் இடுகாடு' 'கோவலன் பொட்டல்' என்று அழைக்கப் படுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் காட்டுவதாகக் கூறி மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பலமுறை முயற்சித்தும், அம்முயற்ச்சியைப் பழங்காநத்தம் பள்ளர்கள் முறியடித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியல்புகளையும் ஒப்பு நோக்கும் போது பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.